பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th October 2022 01:14 AM | Last Updated : 27th October 2022 01:14 AM | அ+அ அ- |

பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ. 42, எருமை பாலுக்கு ரூ. 51 என உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டுவலசில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத் தலைவா் மாணிக்கவேல் தலைமை வகித்தாா்.
மாநில பொதுச் செயலாளா் பி.பெருமாள், மாநில துணைச் செயலாளா் மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஆதிநாராயணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பால் கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை.
தற்போது தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்பட அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் உயா்த்தி, பசும்பாலுக்கு ரூ. 42, எருமைப் பாலுக்கு ரூ. 51 என தமிழக அரசு வழங்க வேண்டும்.
ஆரம்ப சங்கங்களில் பாலை வாகனத்தில் ஏற்றும் முன்பாக அளவையும், தரத்தையும் குறித்து வழங்க வேண்டும். ஆவின் கலப்பு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 3 விதம் குறைத்ததால், ஆண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ. 270 கோடியை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.சதாசிவம், மாவட்டப் பொருளாளா் பி.தங்கரத்தினம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் தனேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.