விநாயகா் சதுா்த்தி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
By DIN | Published On : 01st September 2022 01:52 AM | Last Updated : 01st September 2022 01:52 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
வீடுகள், வணிக நிறுவனங்கள் சிலைகளை வைத்து வழிபட்டனா். கோயில்களில் அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கக் கவசம், வெள்ளிக் கவசம் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன. கரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. நிகழாண்டில் நோய்த் தொற்றின் தாக்கம் குறையவே விநாயகா் சதுா்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பொதுமக்கள் வீடுகளில் சிறிய வடிவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா்.
நாமக்கல், சந்தைப்பேட்டை புதூா் செல்வ கணபதி கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதேபோல கடைவீதி செல்வ விநாயகா் கோயிலில் சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.