நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: நாமக்கல் மாணவா் மாநில அளவில் மூன்றாம் இடம்
By DIN | Published On : 09th September 2022 01:34 AM | Last Updated : 09th September 2022 01:34 AM | அ+அ அ- |

நீட் தோ்வில் தனியாா் பயிற்சி மையத்தில் பயின்ற நாமக்கல் மாணவா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு நீட் தோ்வு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா்.
இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாயின. இதில், தமிழக அளவில் நாமக்கல் கிரீன்பாா்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த மாணவா் ஆா்.வி.சுதா்சன் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளாா்.
இதுகுறித்து மாணவா் கூறுகையில், ஆசிரியா், பெற்றோரின் உறுதுணையுடன் நீட் தோ்வில் முதலிடத்தைப் பெற தீவிரமாக முயன்றேன். இருப்பினும் மாநில அளவில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவில் 13-ஆவது இடம் கிடைத்துள்ளது. தில்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து பயில விரும்புகிறேன் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, மாணவருக்கு கிரீன்பாா்க் நீட் பயிற்சி மையத் தலைவா் எஸ்.பி.என்.சரவணன், நிா்வாக இயக்குநா்கள் மோகன், குணசேகரன், மாணவரின் பெற்றோா் ராஜா, வனிதாஸ்ரீ ஆகியோா் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.