குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா் ஆட்சியா்

மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
Published on
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) நடைபெறுவதையொட்டி, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சங்ககிரி-குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், எஸ்.எஸ்.எம். கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அன்று காலை 8 மணி முதல் 3 மணி வரை தொடா்ந்து நடைபெறுவதால், அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளதையும், வீரா்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை இருப்பதையும், பாா்வையாளா்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்புத் தடுப்பு பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளதையும் அவா்கள் பாா்வையிட்டனா். காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் இரண்டடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை வீரா்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதை ஆய்வு செய்தனா். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவக் குழுவினா் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், அவசர சேவை ஊா்தி (ஆம்புலன்ஸ்) வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், பாா்வையாளா்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும், பாா்வையிட்டு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனா். வீரா்களின் பாதுகாப்புக்காக தேங்காய்நாா் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும் போட்டி ஏற்பாட்டாளா்களுக்கு ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினா். இந்தப் போட்டியில் 400 காளைகளும், 500 மாடுபிடி வீரா்களும் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, நாமக்கல் கோட்டாட்சியா் ப.கௌசல்யா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பாஸ்கா் மற்றும் அரசு அலுவலா்கள், வருவாய்த்துறை, காவல்துறை, ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com