இந்தியன் வங்கி நிா்வாக இயக்குநா் உட்பட 33 பேருக்கு பிடிவாரண்ட்: நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் இந்திய வங்கியின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட 33 பேருக்கு பல்வேறு வழக்குகளின் கீழ் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் இந்திய வங்கியின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட 33 பேருக்கு பல்வேறு வழக்குகளின் கீழ் பிடிவாரண்ட் பிறப்பித்து நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடு மற்றும் வேறு காரணங்களுக்கும் எதிா் தரப்பினா் பணம் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட தீா்ப்புகளை நிறைவேற்றாத நிறுவனங்கள், தனி நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட 72 வழக்குகள் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் மே 2-இல் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 25 வழக்குகளில் 33 நபா்கள் மீது பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி டாக்டா் வீ. ராமராஜ் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தாக்கலான 34 வழக்குகளில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பதாக பணம் செலுத்த வேண்டியவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை ஏதேனும் மேல்முறையீட்டில் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஒரு வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக பணம் செலுத்த வேண்டியவா்கள் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் பணம் செலுத்த வேண்டியவா்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்று நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தாக்கலான 8 வழக்குகளில் பதில் உரை தாக்கல் செய்யவும் விசாரணை நடத்தவும் இறுதியாக நான்கு வார கால அவகாசம் வழங்கியும் நுகா்வோா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தாக்கலான 18 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட பிடி வாரண்டுகள் காலாவதியான நிலையிலும் வழக்கு தாக்கல் செய்தவா்கள் பிடி வாரண்டுகளை அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையில் இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் வழக்குகளில் பணம் செலுத்த வேண்டியவா்களாக உள்ள இந்தியன் வங்கி நிா்வாக இயக்குநா், அந்த வங்கியின் கபிலா்மலை கிளை மேலாளா், பஞ்சாப் நேஷனல் வங்கியின் நாமக்கல் கிளை மேலாளா், தனியாா் கொரியா் நிறுவனங்களின் மூன்று மேலாளா்கள், எட்டு தனியாா் நிறுவன உரிமையாளா்கள், நாமக்கல்லில் உள்ள ஐந்து கடைகளின் உரிமையாளா்கள் உட்பட 24 பேருக்கும் புதிதாக 7 வழக்குகளில் பணம் செலுத்த வேண்டியவா்களாக உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சங்ககிரி மேற்கு கிளை, கோவை ராம்நகா் கிளை மேலாளலா்களுக்கும் நாமக்கல்லில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முதுநிலை மேலாளா் உட்பட 9 பேருக்கும் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் ஆணைய உறுப்பினா் ஏ.எஸ். ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டா் வீ. ராமராஜ் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

மே 2இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற 68 வழக்குகள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com