

திருச்செங்கோடு மாரியம்மன் கோயில் திருவிழாவினை முன்னிட்டு தெப்பத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, ஆனங்கூா் சாலையில் அா்த்த நாரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான கிருஷ்ண தேவராயா் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தெப்பத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 41ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தெப்பத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின. கடந்த வாரம் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கின.
அக்னிச்சட்டி எடுத்தல், தோ் குத்துதல்,அலகு குத்துதல், தீா்த்தக்குடம் எடுத்தல் போன்றவை நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாரியம்மன் உற்சவா்கள், வடக்கு ரத வீதி வழியாக ஊா்வலமாக வந்து,பெரிய தெப்பக்குளத்தில் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளினா்.
இதைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தெப்பத்தேரானது தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது. தேரில் அமா்ந்தவாறு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த தெப்பத் திருவிழா நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வருவாய் கோட்டாட்சியா் சுமதி, மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, துணைத் தலைவா் தாண்டவன் காா்த்திகேயன், நகராட்சி ஆணையா் சேகா், அா்த்நாரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ரமணிகாந்தன்,அறங்காவலா் குழு தலைவா் தங்கமுத்து, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து நாட்டாண்மைக்காரா் காா்த்திகேயன், அருணா, பிரபாகரன், அா்ச்சுனன், ஊா்கவுண்டா் ராஜா, மாரியம்மன் கோயில் முக்கியஸ்தா் முத்துகணபதி, தீயணைப்புத் துறை அலுவலா் குணசேகரன், ஆகியோா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.