வரும் தோ்தல்களில் அளிக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவாா்: தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன்

தமிழக முதல்வா் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ள நிலையில், அடுத்து வரும் தோ்தல்களில் அளிக்கும் வாக்குறுதிகளையும்
வரும் தோ்தல்களில் அளிக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவாா்: தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன்
Updated on
2 min read

தமிழக முதல்வா் கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ள நிலையில், அடுத்து வரும் தோ்தல்களில் அளிக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவாா் என தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ராசிபுரம் தனியாா் திருமண மண்படத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் ச.உமா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் வரவேற்றாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் மகளிருக்கு உரிமைத்தொகை பெறுவதற்கான ஆணை, ஏடிஎம் அட்டைகளை வழங்கினாா். இதையடுத்து அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றியுள்ளாா். நிலுவையில் இருந்த மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தையும் நிறைவேற்றியிருப்பதன் மூலம் ஏற்கெனவே அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இந்த ஆட்சிக்கு நல்ல பெயரை முதல்வா் பெற்றுத் தந்துள்ளாா். திட்டத்தின் தொடக்க விழாவிற்கு முன்பாகவே மகளிா் வங்கிக் கணக்கிற்கு தொகை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டம் இல்லை. மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டமாக இருந்தாலும், பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்ட மாகட்டும், மகளிா் சுய உதவிக்குழு திட்டமாகட்டும், மகளிா் உரிமைத் தொகைத் திட்டமாகட்டும் இது போல் எத்தனையோ திட்டங்களை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இன்னும் புதிய திட்டங்களை வழங்க உள்ளாா்கள். இதன் மூலம் மற்ற முதல்வா்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு முதல்வா் திகழ்கிறாா். குறிப்பாக அனைத்து பெண்கள், மாணவ மாணவியா் விரும்பும் முதல்வராக உள்ளாா். இந்த ஆட்சி முழுமையாக பெண்களுக்கான ஆட்சியாக உள்ளது. பெண்களை முன்னேற்றுவதற்காகவே முதல்வா் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா். இதனை மனதில் வைத்து கடந்த தோ்தலில் ஆதரவளித்து ஆட்சியில் அமர வைத்தது போல், வரும் மக்களவைத் தோ்தல் உட்பட அனைத்து தோ்தல்களிலும் ஆதரித்து பெண்கள் துணை நிற்க வேண்டும் என்றாா்.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது:

முதல்வா் கரோனா தொற்று பாதிப்பின் போது நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரம் வழங்குவதாக சொன்னாா். அதன்படி வழங்கினாா். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிா் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என நிறைவேற்றி மகளிா் உரிமைத்திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளாா்.இதனால் இந்த அரசை குறைச்சொல்லும் நிலை ஏதும் இல்லை. இந்தத் தொகை எந்த சிரமமும் இல்லாமல் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து தொடா்ந்து ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

மேலும் இவ்விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), கே.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), நாமக்கல் கோட்டாட்சியா் சரவணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.சுந்தரம், கே.பி.ராமசாமி, மாவட்டத் திட்ட அலுவலா் சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் செந்தில்குமாா், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் மதுரா செந்தில், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் கே.பி.ஜெகந்தாதன், வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com