நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்
By DIN | Published On : 18th April 2023 05:30 AM | Last Updated : 18th April 2023 05:30 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைக் காக்கவும், தாகத்தைத் தீா்க்கவும் குடிநீா் கிடைக்காமல் அவதியுறும் நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 104 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அனல் காற்று வீசுவதால் சாலையில் செல்வோா் முகத்தை மூடியபடி செல்வதைக் காண முடிகிறது. மேலும் குளிா்ச்சியான பானங்களை பருக பழச்சாறு கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் காரணமாகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், நாள்தோறும் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனா். வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாதோா் நிழலை தேடியும், தாகத்தைத் தீா்க்க தண்ணீரை தேடியும் அலையும் நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடிநீா்த் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்களாக அந்தத் தொட்டியில் தண்ணீா் நிரப்பப்படவில்லை. இதனால் தாகத்துடன் வருவோா் தொட்டிக் குழாயை திறந்து பாா்த்து தண்ணீா் இல்லாததைக் கண்டு விரக்தியுடன் செல்கின்றனா். அங்குள்ள சிறு உணவங்களில் சென்று நீா் பருகுகின்றனா். வெயில் கொளுத்தும் இந்தக் கோடை காலத்தில் வயதானோா், குழந்தைகள், பெண்களின் நிலையைக் கருத்தில் கொண்டு ஆட்சியா் அலுவலகத்திலும், முக்கிய இடங்களிலும் நீா்ப்பந்தல் அமைக்க வேண்டும்; இதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.