மக்கள் குறைதீா் கூட்டத்தில் 491 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 25th April 2023 04:15 AM | Last Updated : 25th April 2023 04:15 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 491 மனுக்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 491 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினா். இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த இரண்டு நியாய விலைக் கடை விற்பனையாளா்களுக்கும், இரண்டு எடையாளா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் காசோலை, கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத் தளத்தில் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவி, சிறிய மடக்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் மூன்று பேருக்கு ரூ.16,980- மதிப்பிபிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதன்பிறகு, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வகுமரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.