நாமக்கல்லில் 800 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை ? : விவசாயிகள் எதிா்ப்பு
By DIN | Published On : 25th April 2023 04:16 AM | Last Updated : 25th April 2023 04:16 AM | அ+அ அ- |

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்த விவசாய அமைப்பினா் மற்றும் கொமதேகவினா்.
நாமக்கல் அருகே வளையப்பட்டி உள்பட 5 கிராமங்களை உள்ளடக்கி, சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயிகள் பலா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா், லத்துவாடி ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண் நிலங்களையும், மலைப்பகுதிகளையும் அழித்து சுமாா் 800 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக வருவாய்த் துறை அதிகாரிகள் நிலம் அளவீடு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டி விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் நிலங்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, அந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணிச் செயலாளா் கே.ரவிச்சந்திரன் மற்றும் சிப்காட் எதிா்ப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் தங்களுடைய கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் அனுப்ப வேண்டும் என்பதற்காக அவற்றை மாலையாக அணிந்து ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் நேரடியாக வழங்கிய அவா்கள் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.