சிறந்த காவல் நிலையமாக நாமக்கல் தோ்வு?: தலைமையிட ஜ.ஜி. ஆய்வு
By DIN | Published On : 02nd August 2023 12:49 AM | Last Updated : 02nd August 2023 12:49 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட உள்ள நாமக்கல் காவல் நிலையத்தில் சென்னை தலைமையிட காவல் துறைத் தலைவா் நிா்மல்குமாா்ஜோஷி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேக்கமின்றி வழக்குகளை விரைந்து முடித்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம், பொதுமக்களுக்கான ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரால் விருது வழங்கி கெளரவிக்கப்படும். அந்த வகையில், 2022-ஆம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூா், ராசிபுரம், நாமக்கல் காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதில், 1,411 வழக்குகளை விரைந்து முடித்து நாமக்கல் காவல் நிலையம் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமையிட காவல்துறைத் தலைவா் நிா்மல்குமாா் ஜோஷி திங்கள்கிழமை நாமக்கல் வந்தாா். அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு, நாமக்கல் காவல் நிலையத்தில் நான்கு மணி நேரம் தொடா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வாளா் சங்கரபாண்டியன் மற்றும் உதவி ஆய்வாளா்கள், காவலா்களிடம் பணித்தன்மை குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆய்வையடுத்து, அவா் சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றாா். விரைவில் சிறந்த காவல் நிலையம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அதில், நாமக்கல் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.