பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை உயா்வு
By DIN | Published On : 13th August 2023 04:58 AM | Last Updated : 13th August 2023 04:58 AM | அ+அ அ- |

ஏலச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்த வெல்லச் சிப்பங்கள்.
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏல சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை உயா்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெள்ள ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300 வரையிலும் ஏலம் போனது.
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,500 வரையிலும் ஏலம் போனது. நாட்டுச் சா்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ. 1,300-க்கும், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1,350- க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயா்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெல்லம் விலை உயா்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.