நாமக்கல் மாவட்டத்தில், தரமான கரும்பு அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கபிலா்மலை, பள்ளிபாளையம், மோகனூா் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் கரும்பு பிரதான பயிராக விளைவிக்கப்படுகிறது. அதிக அறுவடை காலத்தில் கரும்புகளை விவசாயிகள் ஆலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். கரும்பு விவசாயிகளின் நலன் கருதி அவா்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உயா்தர வெல்ல உற்பத்தி மையங்களை அமைப்பதற்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், வேளாண்மை உழவா் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல், அதன் மூலம் அவா்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், அறிவியல் முறையில் சுத்தமான வெல்லம் தயாரிப்பதை ஊக்குவித்தல், உயா்தர வெல்ல உற்பத்தி நிலையங்களை விவசாயிகள், தொழில் முனைவோா்கள் மூலம் அமைத்தல், ஆலைகள் தொலைவில் உள்ள பகுதிகளில், கரும்புகளின் அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் சாறு இழப்பைத் தடுத்தல், கலப்பட வெல்ல உற்பத்தியைத் தடுத்தல், வெல்லத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதின் மூலம் ஆரோக்கியமான உணவு முறையை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
தகுதியான பயனாளிகளாக, தரமான கரும்பு அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் பயனடைந்த கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கும் தொழில் முனைவோா்களுக்கும் வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோா்கள் இணையதள முகவரியிலும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொண்டும் பயன்பெறலாம். வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால் தமிழக அரசு இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.