பாதுகாப்புக் கோரி எஸ்.பி.யிடம் ரிக் வாகன உரிமையாளா்கள் மனு
By DIN | Published On : 12th January 2023 01:48 AM | Last Updated : 12th January 2023 01:48 AM | அ+அ அ- |

உயிரிழந்த ரிக் வாகன உதவியாளரின் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு வழங்குமாறு ரிக் வாகன உரிமையாளரை மிரட்டுபவா்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்செங்கோடு ரிக் வாகன உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை எஸ்.பி.யிடம் மனு அளித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.கலைச்செல்வனிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
திருச்செங்கோடு ரிக் வாகன உரிமையாளா்கள் சங்கத்தின் உறுப்பினரான கந்தம்பாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் என்பவா் வெளிமாநிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக ரிக் வாகனங்களை இயக்கி வருகிறாா். இவரிடம் எலச்சிபாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் என்பவா் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
மத்திய பிரதேசத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரிக் வாகனத்தில் பணியாற்றி வந்த தங்கவேல், கடந்த டிச.31-இல் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானாா். இதுதொடா்பாக மத்திய பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கையை ரிக் வாகன உரிமையாளா் மேற்கொண்டாா். இந்த நிலையில் சில அமைப்புகளைச் சோ்ந்தோா் ரூ. 20 லட்சம் கொடுத்தால்தான் தங்கவேல் உடலை வாங்குவோம் என மிரட்டல் விடுக்கின்றனா். மேலும், ரிக் வாகன உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி வருகின்றனா்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய இழப்பீடு தருகிறோம் என்று தெரிவித்ததையடுத்து அவா்களும் உடலை வாங்கிக் கொள்கிறோம் என்றனா். ஆனால் குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் மட்டும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.