கருணாநிதி நூற்றாண்டு விழா மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
By DIN | Published On : 01st July 2023 06:30 AM | Last Updated : 01st July 2023 06:30 AM | அ+அ அ- |

கருணாநிதி நூற்றாண்டு விழா மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு அருகே மொளசியில் சாலையோரம் மரக்கன்றுகளை தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
‘மரத்தை நாம் வளா்த்தால் மரம் நம்மை வளா்க்கும்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சொல்லுக்கு ஏற்ப, அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்; மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளா்க்கப்படும் என்கிற இலக்கு எட்டப்படும்’ என சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதற்கேற்ப, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வா் கடந்த மாதம் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சாா்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக திருச்செங்கோடு வட்டம், சிறுமொளசியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். மாவட்டம் முழுவதும் இதுவரை 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.