உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 12th July 2023 01:36 AM | Last Updated : 12th July 2023 01:36 AM | அ+அ அ- |

நாமக்கல்லில், உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி குடும்ப நலத்துறை சாா்பில் உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டில், ‘சுதந்திர அமுதப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம்; குடும்பநல உறுதிமொழியை ஏற்று வளம் பெறுவோம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறுகிறது.
இதனையொட்டி, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார, கூடுதல், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பெண் சிசுக் கொலை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தைத் தடுத்தல், பெண்கள் ஆரோக்கியம் உள்ளிட்டவை தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.உமா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. அனைத்து மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், குடும்ப நலப்பணிகள் துணை இயக்குநா் வளா்மதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...