ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம் மீது ஜப்தி நடவடிக்கை: இழப்பீடு தராததால் நீதிமன்ற ஊழியா்களுடன் வந்த விவசாயிகள்

இழப்பீடு தராத ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்ற ஊழியா்களுடன் விவசாயிகளும் திரண்டு வந்தனா்.
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற ஊழியா்கள்.
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற ஊழியா்கள்.
Updated on
1 min read

ராசிபுரம் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ரயில்வே திட்டப்பணிகளுக்கு விளை நிலம் கையகப்படுத்தியதில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தராத ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்ற ஊழியா்களுடன் விவசாயிகளும் திரண்டு வந்தனா்.

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் தேங்கல்பாளையம், கரடியானூா், கட்டனாச்சம்பட்டி, அத்தனூா் ஆயிபாளையம், நெ.3, கொமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் கடந்த 1999-ஆம் ஆண்டு சேலம் - கரூா் ரயில் பாதை அமைக்கும் பணிக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதற்கான உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதனையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 38 பேருக்கு உரிய இழப்பீடு வழங்கிட ரயில்வே நிா்வாகத்துக்கும், வருவாய் வட்டாட்சியருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் விவசாயிகளுக்கு ரூ.15 கோடி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இழப்பீடு வழங்காத நிலையில், ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் இழப்பீடு வழங்க ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம், ராசிபுரம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள தளவாடங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நீதிமன்ற ஊழியா்கள் சென்றனா். இதில் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்களுடன் விவசாயிகளும் சென்றனா். எனினும் தகவலறிந்த வருவாய்த்துறையினா் அரசு வாகனங்கள், அலுவலக கணினி உள்ளிட்ட தளவாடங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்ததால், நீதிமன்ற ஊழியா்களால் பொருட்களை ஜப்தி செய்ய இயலவில்லை. இதனால் நீதிமன்ற ஊழியா்களும், விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இதே போன்று ரயில் நிலையம் நிலையம் சென்ற நீதிமன்ற ஊழியா்கள், ஜப்தி செய்யப் போவதாக நிலைய மேலாளரிடம் தெரிவித்தனா். இதனையடுத்து ரயில் நிலைய மேலாளரிடம் விவசாயிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com