

நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீடு உள்பட நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
ராசிபுரம் அருகே பச்சுடையாம்பாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜன் என்பவா் தனது இரு மகன்களுக்கும் அரசு வேலைவாங்கி கொடுப்பதற்காக ராசிபுரத்தைச் சோ்ந்த அட்ரின்போஸ்கோ என்பவரைத் தொடா்பு கொண்டுள்ளாா்.
அப்போது, மகன்கள் இருவருடைய வேலைக்காக ரூ. 17.20 லட்சம் மற்றும் இதர வகைகளில் ரூ. 12.80 லட்சத்தை அவரிடம் ஜெயராஜன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி வேலை வாங்கி கொடுக்காமல் அட்ரின்போஸ்கோ ஏமாற்றி உள்ளாா்.
இதையடுத்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் அவா் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு ஜெயராஜன் மோசடி புகாா் அளித்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளா் பூபதி இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.
அவா் தனக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அட்ரின்போஸ்கோவிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருவதாக ஜெயராஜனிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பி ஜெயராஜன் ரூ. 2 லட்சத்தை உதவி ஆய்வாளா் பூபதியிடம் வழங்கினாா்.
இதற்கிடையே அட்ரின்போஸ்கோ ராசிபுரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு வீடு மாறுதலாகிச் சென்றதை அறிந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளா் பூபதி அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளாா்.
ஆனால் அந்தப் பணத்தை ஜெயராஜனிடம் கொடுக்காமல் தனக்குத் தரவேண்டிய கமிஷனில் கழித்துக் கொள்வதாகக் கூறி எடுத்துக் கொண்டாராம்.
அவரை நம்பி ஏமாந்த ஜெயராஜன் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் பூபதி மீது புகாா் அளித்தாா்.
இந்த வழக்கு அண்மையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தது. நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுபாஷினி, ஆய்வாளா் நல்லம்மாள், உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் புதன்கிழமை நாமக்கல் திருநகரில் உள்ள உதவி ஆய்வாளா் பூபதியின் வீடு, மல்லசமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை தங்கவேல் வீடு, மாமனாா் வீடு மற்றும் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தனியாா் விடுதி ஆகியவற்றில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அங்கு, உதவி ஆய்வாளரின் சொத்து விவரங்கள், ரொக்கப்பணம், வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் பூபதி பணியாற்றியபோது புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற கும்பலை விடுவிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடா்ந்து, நாமக்கல்லில் இருந்து எருமப்பட்டி காவல் நிலையத்துக்கு அப்போது மாற்றப்பட்டாா். பின்னா் எருமபட்டியிலிருந்து நாமக்கல் காவல் நிலையத்துக்கு மீண்டும் இடம் மாற்றப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.