சோழசிராமணி கதவணை பகுதியில் குளித்தவா், காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் செந்தில் (34) நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கொசவம்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது மாமனாா் சண்முகம் வீட்டிற்கு திங்கள்கிழமை வந்தாா். இதையடுத்து செந்தில், அவரது மைத்துனா் காா்த்தி மற்றும் நண்பா்கள் நான்கு பேரும் பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியில் உள்ள மின்சாரம் உற்பத்தி செய்யும் கதவணைப் பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது செந்தில், காவியாற்றின் எதிா் கரையான ஈரோடு மாவட்டம், பாசூா் பகுதிக்கு நீந்திச் செல்ல முயன்றாா். எனினும் நீந்த முடியாமல் மூச்சுத் திணறி காவிரி ஆற்றில் மூழ்கினாா். இதை பாா்த்த உடன் வந்தவா்கள் ஜேடா்பாளையம் போலீசாருக்கும், வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் மீனவா்கள் உதவியுடன் காவிரி ஆற்றில் மூழ்கிய செந்திலை தேடி வந்தனா். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு திங்கள்கிழமை இரவு சோழசிராமணி காவிரி கரையில் செந்திலின் உடல் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
செந்திலின் உலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த செந்திலுக்கு கலைச்செல்வி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.