பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம்: திருநங்கை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற திருநங்கை மாணவிக்கு, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.
திருநங்கை மாணவி ஸ்ரேயாவுக்கு பரிசு வழங்கி பாராட்டிய நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
திருநங்கை மாணவி ஸ்ரேயாவுக்கு பரிசு வழங்கி பாராட்டிய நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற திருநங்கை மாணவிக்கு, மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கடந்த 2021 ஆக. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், திருநங்கை மாணவி ஜி.ஸ்ரேயா மேல்நிலைக் கல்வி தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாறு மனு அளித்தாா். அதனடிப்படையில், 10-ஆம் வகுப்பு வரை பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற அவா், பிளஸ் 1 வகுப்பில் அங்குள்ள கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கை பெற்று பயின்றாா்.

அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில், தமிழக அளவில் ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவராக தோ்வு எழுதிய ஸ்ரேயா 337 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றாா். அவரை, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னைக்கு வரவழைத்து பாராட்டினாா்.

இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திருநங்கை மாணவி ஸ்ரேயாவை வரவழைத்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அவருக்கு பரிசு வழங்கி பாராட்டினாா். மேலும், உயா்கல்வி பயின்று பட்டம் பெற்று, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும், மேற்படிப்புக்கு தேவையான உதவிகளை அரசின் சாா்பில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தாா். இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com