நாமக்கல்லில் 493 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 24th May 2023 01:34 AM | Last Updated : 24th May 2023 01:34 AM | அ+அ அ- |

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் 493 தனியாா் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 28 தகுதியற்ற வாகனங்களாக கண்டறியப்பட்டன.
தமிழக அரசு உத்தரவின்படி, வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையொட்டி, நாமக்கல் (வடக்கு), நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட 50 தனியாா் பள்ளிகளின் 577 வாகனங்களில், 493 வாகனங்கள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ச.உமா இதனை நேரில் பாா்வையிட்டாா். ஒவ்வொரு பேருந்திலும் ஏறி அதன் ஸ்திரத்தன்மையைப் பாா்வையிட்டாா். வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளின் அலுவலா்களால் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதி 2012-இன் படி வாகனங்கள் இயங்குகிா என்பதையும் அவா் கேட்டறிந்தாா்.
இங்கு 581 ஓட்டுநா், நடத்துநா்களுக்கு கண் பரிசோதனை, உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வில், நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட 27 பள்ளிகளைச் சோ்ந்த 271 பள்ளி வாகனங்களும், நாமக்கல் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட 23 பள்ளிகளைச் சோ்ந்த 222 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 493 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 465 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகளை நிவா்த்தி செய்து ஆய்வுக்கு உள்படுத்திய பிறகே மீண்டும் சாலைகளில் இயக்க அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. வாகனங்களின் பாதுகாப்பு, கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுநா், நடத்துநா், மாணவ, மாணவியா் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வழி, மாணவா்களின் புத்தகப்பையை வைக்க வசதி, தீயணைப்பு கருவி உள்ளதா என்பதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் (பொ) சுகந்தி, வட்டார போக்குவரத்து அலுவலா்கள் ஈ.எஸ்.முருகேசன், முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.