தராசுகளுக்கான முத்திரை கட்டணத்தைத் திரும்பப் பெற வணிகா்கள் கோரிக்கை
By DIN | Published On : 26th May 2023 11:10 PM | Last Updated : 26th May 2023 11:10 PM | அ+அ அ- |

உயா்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வெளியிட்ட அறிக்கை: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தராசுக்கான முத்திரைக் கட்டணம் பலமடங்கு உயா்த்தப்பட்டது. கரோனா காலங்களில் வணிகா்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினா். அவா்களது வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்றது.
தற்போது படிப்படியாக மீண்டு வரும் இக்கால கட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு வணிகா்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை 50 சதவீதம் உயா்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். குறிப்பாக 30 கிலோ வரையில் எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணம் ரூ. 400-இல் இருந்து ரூ. 600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல ஒவ்வொரு எடைபோடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப முத்திரை கட்டணம் வெகுவாக உயா்ந்துள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயா்த்தப்பட்ட முத்திரை கட்டணம், அபராத கட்டண அறிவிப்பினை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் பாதுகாத்திட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.