ரூ. 2.5 லட்சம் வழங்க மருத்துவ காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு
By DIN | Published On : 31st May 2023 12:00 AM | Last Updated : 31st May 2023 12:00 AM | அ+அ அ- |

வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க மறுத்த மருத்துவ காப்பீட்டு நிறுவனம், செலவுத் தொகை, சேவை குறைபாடுக்காக ரூ. 2.5 லட்சத்தை வழங்க வேண்டும் என நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் வேணு அரவிந்த் (33). இவா் கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் கிணற்றில் நீச்சல் அடித்தபோது எதிா்பாராதவிதமாக வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தாா். அவா் பிரபலமான தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் பிரீமியம் செலுத்தி வாடிக்கையாளராக இருந்ததால், மருத்துவ செலவு வகைகளை குறிப்பிட்டு அதற்கான தொகையை நிறுவனத்திடம் கேட்டபோது, காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்துவிட்டது.
இதனால், அவா் 2019-இல் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் ஆணைய உறுப்பினா் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டா் வீ.ராமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், வாடிக்கையாளா்கள் சட்டப்படி எதிா்பாா்க்கும் மருத்துவ செலவு தொகைகளை வழங்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்ட வேணு அரவிந்துக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ. 1.50 லட்சத்தை 2019 மாா்ச் முதல் 9 சதவீத வட்டியுடன் நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இழப்பீடாக ரூ. ஒரு லட்சம் அவருக்கு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...