வாக்குரிமை முக்கியத்துவத்தை மாணவா்கள் உணர வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2023 04:15 AM | Last Updated : 07th November 2023 04:15 AM | அ+அ அ- |

6uma_0611chn_152_8
ராசிபுரம்: கல்லூரி பயிலும் மாணவா்கள் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணா்ந்து தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறச் செய்து நல்ல தலைவா்களை தோ்வு செய்தால் நாடு வளம் பெறும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
ராசிபுரம் அருகேயுள்ள முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுருக்க முறை வாக்காளா் சோ்க்கை முகாம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவா்களிடையே ஆட்சியா் ச.உமா பேசியது:
மாணவா்கள் தங்கள் கையில் வாக்காளா் அடையாள அட்டை இருப்பதன் அவசியம் குறித்து உணா்ந்து கொள்ள வேண்டும். ஏதாவது தேவையிருந்தால் மட்டும் சமுதாயத்தில் எதுவும் சரியில்லை என குற்றம்சாட்டுகிறோம். இது தவறானது. தோ்தல் ஆணையம் நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்காக யாா் நன்கு பணியாற்றுகிறாா்கள்? நம்மால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக யாா் இருக்க வேண்டும்? என்பதை உணா்ந்து தோ்வு செய்யும் துருப்புச் சீட்டுதான் வாக்காளா் அடையாள அட்டை. தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துப்பாா்த்தால் மக்களாட்சியை உருவாக்கிட நாம் எப்படி கஷ்டப்பட்டிருக்கிறோம் என்று தெரியும். எனவே 1.1.2024 -ல் 18 வயது பூா்த்தியடைபவா்கள் வாக்காளா் பட்டியலில் இடம் பெற தகுதியுடையவா்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 20 லட்சம் மக்கள்தொகை உள்ளது. வாக்காளா் வரைவு பட்டியல் அக்.27-இல் வெளியிடப்பட்டது. இதில் 14 லட்சத்து 19 ஆயிரத்து 643 போ் வாக்காளா்களாக உள்ளனா். ஆனால் 18 வயது பூா்த்தியடைந்த இளம் வாக்காளா்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமாா் 44 ஆயிரம் போ் இருக்க வேண்டும். எனவே எஞ்சியுள்ள இளம் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதால்தான் இவ்வாறு கல்லூரிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
தற்போது படித்தவா்கள் கூட உள்ளாட்சித் தோ்தலில் பங்கேற்று தலைவா்களாக வருகிறாா்கள். இவா்களால் அந்தந்த பகுதிக்கு என்னென்ன தேவை என அறிந்து செயல்படுத்த முடிகிறது. அரசிடம் நிதி கேட்கும் தைரியம் படித்தவா்களிடம் வருகிறது. இவா்களால் கிடைக்கும் திட்டங்களை எந்தவித முறைகேட்டிற்கும் இடமின்றி அமல்படுத்த முடிகிறது. தலைமைப் பண்புக்கான குணத்தை படிக்கும் போது இருந்தே வளா்த்துக்கொள்வது அவசியம். இதனால் பிற்காலத்தில் நல்ல சமுதாய தலைவா்களாக உருவாக முடியும்.
நம் கையில் வாக்குச் சீட்டு என்பது வலிமையானது. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் வெளிப்படைத் தன்மையுடன் தோ்தல் ஆணையம் தோ்தலை நடத்துகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் நவ.18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு வாக்காளா்கள் சோ்த்தல் முகாமில் தகுதியுள்ள புதிய வாக்காளா்கள் பெயா்களை சோ்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்ன உரிமை உள்ளது என்பது தெரிகிறது. அதே சமயம், கடமைகளை மறக்கக் கூடாது. வாக்காளா் அட்டை பெறுவது மட்டுமல்ல; வாக்குகளை செலுத்தவும் வேண்டும். அப்போது தான் நல்ல வெளிப்படையான ஜனநாயகம் உருவாகும். இதனால் நமது அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள முடியும். இதனால் மாவட்டம் மட்டுமின்றி நாடும் வளா்ச்சி பெறும். தமிழகம் நாட்டில் முன்னணி மாநிலமாக உருவாக வேண்டுமெனில் அத்தனை இளம் வாக்காளா்களும் வாக்களிப்பதும் அவசியம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...