

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மகளிா் சுய உதவிக்குழுவினா் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்வதற்காக மூன்று நடமாடும் வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன.
தமிழகம் முழுவதும் மகளிா் சுய உதவிக்குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவா்கள் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்தும் நோக்கிலும் ‘மதி எக்ஸ்பிரஸ்’ என்ற வாகனத் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. மேலும், முக்கிய நகரங்களில் மகளிா் சுய உதவிக்குழு அங்காடிகளும் திறக்கப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்திற்கு மூன்று நடமாடும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தலா ரூ.3.20 லட்சம் செலவில் தயாா் செய்யப்பட்டுள்ள இந்த வாகனங்கள் ராசிபுரம், சேந்தமங்கலம், எலச்சிப்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுவைச் சோ்ந்தோருக்கு வழங்கப்பட உள்ளன. அவா்கள் ரூ. 16 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் முன்பணம் திரும்ப வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளாா். இந்த வாகனத்தில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்களான சிறு தானிய உணவுப் பொருள்கள், தின்பண்டங்கள், கொல்லிமலை மிளகு, நாட்டு சா்க்கரை, ஜவுளி வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருள்கள், பயறு வகைகள், பாக்கு மட்டைத் தட்டுகள், துணிப்பை, சணல் பை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மகளிா் சுய உதவிக் குழுவினா் மட்டுமின்றி, கிராமப்புற மக்களின் நலனுக்காகவும் இந்த மதி எக்ஸ்பிரஸ் வாகனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மகளிா் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.