

சமூக நீதியை வலியுறுத்தும் விதமாகவே பேசினேன்; சநாதனம் பற்றிய கருத்துகளைத் தெரிவிக்காததால் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
சேலத்தில் டிசம்பா் 17-ஆம் தேதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு இளைஞா் அணியினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது. திமுகவில் கட்சிக்காக உழைக்கும் தொண்டா்களுக்கு உயா் பதவி காத்திருக்கிறது.
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிக் காட்ட வேண்டும். அண்மையில் மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு போல திமுக மாநாடு அமையாது. கொள்கை, கோட்பாடு இல்லாமல் அவா்களுடைய மாநாடு அமைந்தது.
வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவின் வெற்றியை எதிரொலிக்கும் வகையில் இந்த மாநாடு அமையும். தோ்தல் வாக்குறுதிகளை அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. காலை உணவுத் திட்டத்தில் 17 லட்சம் மாணவா்கள் பயன் பெறுகின்றனா்.
தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்துவதற்காக ஆய்வு செய்து சென்றனா். பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. அண்மையில் நான் சநாதனம் பற்றி பேசியது பாஜகவினரால் அதிகம் விமா்சிக்கப்பட்டது. என்னை மன்னிப்புக் கேட்குமாறு கூறினா். நீதிமன்றம் சென்றாலும் இதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியது சமூகநீதி குறித்தது; சநாதனம் அல்ல. வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றாா்.
முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாநாட்டு நிதியாக ரூ. 10 லட்சம் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ. ராமலிங்கம், கு. பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி. விஸ்வநாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.