பவித்திரம் அச்சப்பன் கோயிலில் சாட்டையடி திருவிழா
By DIN | Published On : 25th October 2023 12:36 AM | Last Updated : 25th October 2023 12:36 AM | அ+அ அ- |

எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாட்டையடி திருவிழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் விஜயதசமியன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் கலந்து கொள்வா்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மேல் பெண்களை, பூசாரி ஒருவா் சாட்டையால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நிகழாண்டில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சாட்டையடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை காண ஏராளமான பெண்கள், பக்தா்கள் திரண்டு வந்திருந்தனா்.
சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ செளண்டம்மன் கோயிலில் நவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மேலும், விஜயதசமி என்பதால் பக்தா்கள் கடவுள்களின் வேடமிட்டு வாகனங்களிலும், நடந்தபடியும் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...