

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 1.53 கோடி மதிப்பீட்டில் 76 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் பணியை ராசிபுரத்தில் வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
2023- 24 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை- உழவா் நலத் துறை நிதிநிலை அறிக்கையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ஒரு கிராமத்திற்கு இரண்டு பவா்டில்லா் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் 2,504 கிராமங்களுக்கு ரூ. 43 கோடி மானியத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப் பணிகள், இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக முதல்கட்டமாக ரூ. 35 கோடி மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவா்டில்லா்கள், 293 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4,200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ரூ. 1.53 கோடி மதிப்பீட்டில் 76 விவசாயிகளுக்கு பவா்டில்லா்கள், வேளாண் கருவிகள் வழங்கும் விழா ராசிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினாா். விழாவில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை), முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.