கோட்டாட்சியா் அனுமதியுடன்கோயில் பூட்டு உடைப்பு: பேளுக்குறிச்சியில் போலீஸாா் குவிப்பு

நாமக்கல் கோட்டாட்சியா் அனுமதியுடன் பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்தினா்.
பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயிலினுள் வியாழக்கிழமை வழிபாடு செய்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண்கள்.
பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயிலினுள் வியாழக்கிழமை வழிபாடு செய்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த பெண்கள்.
Updated on
1 min read

நாமக்கல் கோட்டாட்சியா் அனுமதியுடன் பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் வியாழக்கிழமை ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்தினா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த கோயிலில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கும், மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே கோயில் வழிபாடு தொடா்பாக 30 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்தது.

தங்களுக்கு சொந்தமான கோயிலில் மற்ற சமூகத்தினா் வழிபட அனுமதியில்லை என்று ஒரு தரப்பும், அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் உள்ளதால் அது அனைவருக்கும் பொதுவானது என மற்றொரு சமூகத்தினரும் கூறி வந்தனா்.

மேலும், இந்த பிரச்னை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அண்மையில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயிலுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் ஒன்றியச் செயலாளா் சரவணன் தலைமையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேங்காய், பூ, பழம், மாலை உள்ளிட்டவற்றுடன், சிகப்பு, மஞ்சள் நிற சேலை அணிந்து ஊா்வலமாக வந்தனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். நாமக்கல் கோட்டாட்சியா் மா.க.சரவணன் சம்பவ இடம் வந்து விசாரித்தாா். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸாா் அதிகளவில் குவிக்கப்பட்டனா். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்திடம் கதவை திறக்குமாறு கூறினா். பூசாரியிடம் சாவி உள்ளதாகவும், அவா் வரவில்லை எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் உதவியுடன் வெளிப்பூட்டும், உள்பூட்டும் உடைக்கப்பட்டு மாரியம்மனை வழிபாடு செய்ய அங்கிருந்தோருக்கு கோட்டாட்சியா் அனுமதி வழங்கினாா். இந்த சம்பவத்தால் பேளூக்குறிச்சி பகுதியில் பரபரப்பு நிலவியது. நாமக்கல் கோட்டாட்சியருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com