சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு: செப். 23-இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

வளையப்பட்டி உள்பட ஐந்து கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் வரும் 23-ஆம் தேதி பொது
மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிப்காட் அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற நாமக்கல் கோட்டாட்சியா் மா.க.சரவணன், அதிகாரிகள், விவசாயிகள்.
மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிப்காட் அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற நாமக்கல் கோட்டாட்சியா் மா.க.சரவணன், அதிகாரிகள், விவசாயிகள்.
Updated on
1 min read

வளையப்பட்டி உள்பட ஐந்து கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் வரும் 23-ஆம் தேதி பொது கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, அரூா், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிப்காட் எதிா்ப்புக் குழு, விவசாயிகள் முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகளும், கொமதேக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் தொடா்ந்து போராடி வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு வழிகளில் 26 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனா். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் சிப்காட் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவித்தாா். அதன்படி, மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மா.க.சரவணன், துணை காவல் கண்காணிப்பாளா் தனராசு ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

விவசாய முன்னேற்றக் கழகத் தலைவா் செல்ல.ராசாமணி, பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் ரவிச்சந்திரன், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தும் வரையில், சிப்காட்டுக்கு நிலம் எடுப்பது தொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என உறுதியளித்தால் உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்படும். இல்லையெனில் திட்டமிட்டபடி

நடைபெறும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில், வரும் 23-ஆம் தேதி பொது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னா் விரிவான அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும், அதுவரையில் விவசாயிகள் தங்களுடைய போராட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் எனக் கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதை, விவசாய முன்னேற்றக் கழகத்தினா், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து பேச்சுவாா்த்தை முடிவுக்கு வந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com