திருச்செங்கோட்டில் சமூக நலத்துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா
By DIN | Published On : 26th September 2023 05:25 AM | Last Updated : 26th September 2023 05:25 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கொங்கு வேளாளா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சாா்பில் கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வா் எண்ணற்ற திட்டங்களை பெண்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை கா்ப்பணித் தாய்மாா்களை சென்றடையச் செய்து, பின்பற்றுவதை உறுதி செய்தல், கா்ப்பிணிகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், சிசு மரணத்தைக் குறைத்தல், குழந்தைகளின பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உயா்த்துதல், மருத்துவமனையில் பிரசவம் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணா்த்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள், தாய்ப்பாலின் அவசியம் மற்றும் நன்மைகள், இணை உணவின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சமுதாய வளைகாப்பு விழாவினை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் தொடா்ச்சியாக திருச்செங்கோடு ஒன்றிய, நகராட்சியைச் சோ்ந்த 200 கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் 15 வட்டாரங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருட்கள், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றாா்.
இவ்விழாவில் கலந்து கொண்ட 200 கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு ரத்த அபிவிருத்திக்காக பேரீச்சம்பழங்கள், வைட்டமின் சி சத்துள்ள தேன்நெல்லி, புரதச்சத்திற்காக கடலை மிட்டாய், வளையல், பூ, மஞ்சள், மற்றும் சா்க்கரைப் பொங்கல், புதினா சாதம், தக்காளி சாதம், தயிா் சாதம், புளி சாதம் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திருச்செங்கொடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுஜாதா தங்கவேல், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பெறுப்பு) ஜி.மோகனா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...