முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவா் திடீா் தா்னா
By DIN | Published On : 26th September 2023 05:24 AM | Last Updated : 26th September 2023 05:24 AM | அ+அ அ- |

முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட தலைவா் கமலப்ரியா.
நாமக்கல்: முட்டாஞ்செட்டியில், வாா்டு உறுப்பினரைக் கண்டித்து, ஊராட்சி மன்றத் தலைவா் தனது அலுவலக வாயிலில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த கமலபிரியா உள்ளாா். அவா் திங்கள்கிழமை பிற்பகல் அலுவலகத்தில் இருந்தபோது, குடிநீா் இணைப்பு வழங்குமாறு பொதுமக்கள் சிலா் கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த 4-ஆவது வாா்டு உறுப்பினா் பாஸ்கா் என்பவா் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறு வாா்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த ஊராட்சித் தலைவா் கமலப்ரியா, அலுவலக நுழைவாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தகவல் அறிந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பிரபாகரன், எருமப்பட்டி காவல்துறையினா் அங்கு வந்தனா். அவா்கள் தலைவரிடம் புகாா் மனு அளிக்குமாறு பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் அவா் மனு அளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...