

நாமக்கல்: நலிவடைந்த நிலையில் இயங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாய உபகரணங்களை கொள்முதல் செய்ய நிா்ப்பந்திப்பதாக சங்கப் பணியாளா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின், நாமக்கல் மாவட்டக் கிளை சாா்பில், அதன் தலைவா் பி.சிவசங்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா். அதில், நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்தச் சங்கங்களில், பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருள்கள் வாங்க, விருப்பமுள்ள சங்கங்களில் மட்டுமே அமல்படுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், நலிவடைந்த, தொடா்ந்து நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களிடம், விவசாய உபகரணங்கள், லாரி, சரக்கு வாகனங்களை வாங்குமாறு நிா்ப்பந்திக்கப்படுகிறது. இதனால் கூட்டுறவு கடன் சங்கங்கள் மேலும் நலிவடைந்து பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனை கைவிடக் கோரி ஏற்கெனவே அனைத்து மாவட்டங்களிலும் இணைப்பதிவாளா்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உபரணங்கள், வாகனங்கள் வாங்குமாறு கட்டாயப்படுத்தும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், அக்.3-இல் அனைத்து பணியாளா்களும் தொடா் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனா்.
டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும்: இந்நிலையில், நாமக்கல் மாவட்ட விடுதலைக்களம் சாா்பில் அதன் தலைவா் நாகராஜன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். அந்த மனுவில், பழங்குடிகள் (டிஎன்டி) என்ற சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அரசின் கல்விக் கட்டணச் சலுகையை பெற்று வந்தனா். 68 டிஎன்டி சமூகங்கள் இருந்த நிலையில், பழங்குடிகள் என்பதை சமுதாயம் என மாற்றிவிட்டனா். இதன்விளைவாக சீா்மரபினா் என்றழைக்கப்படும் பழங்குடிகளுக்கு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. பழங்குடிகளை தற்போது எம்பிசி பட்டியலில் சோ்க்க முயற்சி நடைபெறுகிறது. இதன்மூலம் இட ஒதுக்கீட்டுச் சலுகையை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, பழங்குடிகளுக்கான சலுகைகளை தடையின்றி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.