திருச்செங்கோட்டில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் கலந்துகொண்ட ஆட்சியா் ச.உமா. உடன், ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ, எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்டோா்.
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் கலந்துகொண்ட ஆட்சியா் ச.உமா. உடன், ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ, எஸ்.எம்.மதுரா செந்தில் உள்ளிட்டோா்.

தேவனாங்குறிச்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையேற்று தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் சுகந்தி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில், திருச்செங்கோடு நகராட்சி துணைத் தலைவா் டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இம்முகாமில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி ரூ. 3.50 லட்சம் வழங்கி உள்ளாா். இத்திட்டத்தின் கீழ் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 6,500 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ள சுமாா் 560 பயனாளிகளுக்கு அடுத்தாண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்ட ஆணை வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 2021 முதல் 3 ஆண்டுகளில் சுமாா் 16,800 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ. 1.50 லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை உயா் மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும்.

மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாணவ, மாணவியருக்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் உயா்கல்வி பயில மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 18,651 மாணவியரும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் சுமாா் 12,796 மாணவா்களும் மாதம் ரூ. 1,000 பெற்று பயன்பெற்று வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் முகாம்கள் மூலம் பெறப்பட்ட 95 சதவீத கோரிக்கை மனுக்கள் மீது 30 நாள்களில் தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம்கட்டமாக ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிடப்பட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 322 ஊராட்சிகளில் 69 இடங்களில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது. விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொண்டு தங்களது விவசாயத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதில் அனைத்து அரசு துறை அலுவலா்களும் முனைப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். பொதுமக்கள் இவற்றைப் பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதரத்தை உயா்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

முகாமில் துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினா்.

தொடா்ந்து, மொத்தம் 703 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் என்.அருண்குமாா், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளா் க.பா.அருளரசு, திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட நல அலுவலா் மரு.க.பூங்கொடி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வாா் பாதுகாப்பு அலுவலா் த.முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ப.கவிதா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நாராயணன் உள்ளிட்டோ துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com