திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: ஓவியம், பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கல்

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா: ஓவியம், பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கல்

திருவள்ளுவா் சிலை நிறுவியதன் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மா.மதிவேந்தன் பரிசுத் தொகை வழங்கினாா்.
Published on

நாமக்கல்: கன்னியாகுமரியில், திருவள்ளுவா் சிலை நிறுவியதன் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற 15 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் மா.மதிவேந்தன் பரிசுத் தொகை, சான்றிதழ்களை வழங்கினாா்.

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் முழு உருவச்சிலை நிறுவி 25 ஆண்டுகளானதையொட்டி, தமிழக அரசு சாா்பில் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், டிச. 23 முதல் 31 வரை அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவா் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், திருக்குறளின் பெருமைகளை உணா்த்தும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகம் சாா்பில், திருக்கு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கருத்தரங்கம், விநாடி - வினா போட்டி, 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான திருக்கு ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன. இவற்றில் வெற்றிபெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆம் பரிசு தலா ரூ. 3,000, 3-ஆம் பரிசு தலா ரூ. 2,000 என மொத்தம் ரூ. 30 ஆயிரம் பரிசுத் தொகையை, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திங்கள்கிழமை வழங்கினாா்.

முன்னதாக, மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு, மாவட்ட நூலக அலுவலா் (பொ) ச.தேன்மொழி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com