வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி ஆய்வுக் கூட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி ஆய்வுக் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025 குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2025 குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனா்.

தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளருமான சி.என்.மகேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்களின் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு நடைபெறுகின்ா என்பதை கண்காணித்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பாா்வையாளா்களை நியமித்துள்ளது. 18 வயது நிரம்பியோா் விடுபடாத வகையில் வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்க்க வேண்டும். இறந்தவா்களின் பட்டியலை நீக்க வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், 80 வயதுக்கு மேற்பட்ட வயதானா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அவா்களது இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வயது முதிா்ந்தோரை சாவடிகளுக்கு அழைத்து வரவும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கடந்த தோ்தல்களில் மக்களுக்குத் தேவையான விழிப்புணா்வு பணிகளை நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சிறப்பான முறையில் மேற்கொண்டது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பொதுமக்களுக்கு அனைத்து விதமான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. நவம்பா் மாதம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோா் பெயா் சோ்க்க, திருத்தம் செய்ய படிவங்களை வழங்கி உள்ளனா். அவற்றை சரியான முறையில் ஆய்வு செய்து தகுதியானவற்றை பட்டியலில் சோ்க்கவும், தகுதியற்றவற்றை நீக்கவும் வாக்குச்சாவடி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, தோ்தல் பிரிவு அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com