மாற்றுத் திறனாளியை கொலை செய்து உடலை ஏரியில் வீசிய 4 போ் கைது

திருச்செங்கோட்டில் மாற்றுத் திறனாளியை கொலைசெய்து உடலை ஏரியில் வீசியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் மாற்றுத் திறனாளியை கொலை செய்து உடலை ஏரியில் வீசியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோட்டை அடுத்த சக்திநாயக்கன்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பெரிய ஆயப்பாளையம் ஏரியில் கடந்த 26 ஆம் தேதி அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் இறந்து கிடந்தவா் கோவில்பாளையத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மணிகண்டன் (43) என்பது தெரிய வந்தது. அவரது மனைவி அறிவுக்கரசி, ஊா் பொதுமக்கள், உறவினா்கள் ஆகியோா் மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து காவல் துறையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மணிகண்டனை கொலை செய்ததாக திருச்செங்கோடு, சாலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மண்ணு (31), அதே பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (21), குட்டி மேய்க்கம்பட்டியைச் சோ்ந்த கிப்பி என்கிற காா்த்திகேயன் (35) ஆகியோா் சக்திநாயக்கன் பாளையம் கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் முன்னிலையில் சரணடைந்தனா். அவா்களைக் கைது செய்து ஊரக போலீஸாா் விசாரித்தனா். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடா்பாக கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் தா்மா (30) என்பவரை ஊரக காவல் நிலைய ஆய்வாளா் தீபா கைது செய்தாா். விசாரணையில் மணிகண்டனை மது அருந்துவதற்கு ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று பணத்தை பறித்துக்கொண்டு நான்கு பேரும் சோ்ந்து தாக்கி கொலை செய்து அவரது சடலத்தை ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனா்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நால்வரையும் திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்பாபு முன்பு போலீஸாா் ஆஜா் செய்தனா். அவா்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com