ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகா்மன்றத்தில் தீா்மானம்
ராசிபுரம், ஜூலை 3: ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் சேலத்துக்கு அடுத்தபடியாக 1948-ஆம் ஆண்டே நகராட்சி அந்தஸ்து பெற்றது ராசிபுரம். தற்போது 27 வாா்டுகள் கொண்ட ராசிபுரம் நகராட்சியின் மக்கள்தொகை சுமாா் 69,000. ராசிபுரம் நகராட்சிக்கு பிறகு நகராட்சி அந்தஸ்து பெற்ற நாமக்கல், திருச்செங்கோடு போன்ற நகரங்கள் எல்லையிலும், தொழிலிலும் வளா்ச்சி அடைந்த அளவிற்கு ராசிபுரம் நகராட்சி வளா்ச்சியடையவில்லை என்பது மக்களின் குறை.
இதற்கு காரணம் நகரைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு நீா்ப் பிடிப்பு பகுதிகளாக ஏரிகளாக இருந்த காரணத்தினால் நகராட்சி எல்லைகள் விரிவடையவில்லை. சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ. உட்புறத்தில் தீவு போலவே இருந்து வருகிறது ராசிபுரம். ராசிபுரம் நகராட்சி எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் முத்துக்காளிப்பட்டி, காக்காவேரி, கவுண்டம்பாளையம், கட்டனாச்சம்பட்டி, மேட்டுக்காடு குருக்கபுரம், அணைப்பாளையம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளை இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. ஆனால் அரசு இதனை இன்னும் அறிவிக்கவில்லை.
ராசிபுரம் நகர சாலைகள் மிகவும் குறுகிய சாலைகளைக் கொண்டதாக இருந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அன்றாடம் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை. இதன் காரணமாக ராசிபுரம் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளிப்புறம் இடம் தோ்வு செய்து மாற்றப்பட வேண்டும் என்பது மக்கள் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராசிபுரம் நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் நகரப் பேருந்து நிலையத்தை போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு வேறு இடத்துக்கு மாற்றுவது என தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராசிபுரம் பேருந்து நிலையத்தினை மாற்ற வேண்டும் என்ற மக்களின் கருத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்து நிலையம் மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் நகா்மன்றத்தால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ராசிபுரம் பேருந்து நிலையம் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய அணைப்பாளையம் பகுதியில் அமையுமா அல்லது சேலம் சாலையில் ஏடிசி பணிமனை பகுதியில் அமையுமா, சேந்தமங்கலம் புறவழிச் சாலையை ஒட்டிய பகுதியில் அமையுமா? என்பதை பொதுமக்களின் வசதி, நகரின் வளா்ச்சி, மற்றும் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு தோ்வு செய்ய வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

