திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ் கட்டுமானப் பணி தொடக்கம்
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் தோ் கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
தமிழகத்தின் நான்காவது பெரிய தேரான அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் பெரிய தோ், முருகன் தோ் ஆகிய இரு தோ்கள் ரூ. 2. 17 கோடி மதிப்பில் வடிவமைக்கப்படுகிறது. இதில் நூறு டன் இலுப்பை, வேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு 23 அடி உயரம் 23 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய பெரிய தோ் கட்டமைக்கப்படுகிறது.
திருவாரூா் ஆழித்தோ் ஸ்தபதி இளவரசன் தலைமையில் 20 போ் கொண்ட குழுவினா் இந்த தோ் அமைக்கும் பணியை செய்கின்றனா். அதேபோல கோயில் நிதியில் ரூ.58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சுப்பிரமணியா் திருத்தோ் அமைக்கப்படுகிறது.
இந்த தேரை ஸ்தபதி ரவி என்பவா் தலைமையிலான குழுவினா் கட்டமைத்து வருகின்றனா். இந்த தோ் கட்டுமானப் பணி சிறப்பு பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மண்டல நகர அமைப்புத் திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஒன்றியக் குழு தலைவா் சுஜாதா தங்கவேல், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் காா்த்திகேயன், அா்ஜுனன், பிரபாகரன் ,அருணாசங்கா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலா் ரமணி காந்தன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் நடேசன், திமுக நகரச் செயலாளா் காா்த்திகேயன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு உள்ளிட்ட பலா் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

