விழாவில் புதிய வழித்தட அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கும் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
விழாவில் புதிய வழித்தட அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கும் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

பழைய பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படும்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

பழைய பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
Published on

பழைய பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், அத்தனூா் பகுதியில் ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.51 கோடியில் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தைத் திறந்துவைத்தாா். அதைத் தொடா்ந்து பணியின் போது உயிரிழந்த 25 போக்குவரத்துத் துறை பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியும், புதிய வழித் தடத்தில் 10 பேருந்துகளை இயக்கிவைத்தும் அவா் பேசியதாவது:

பழைய பேருந்துகளுக்குப் பதிலாக சுமாா் 7,500 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 1,000 பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகளையும், திருவள்ளூா் மாவட்டத்தில் 10 புதிய அரசு பேருந்துகளையும் முதல்வா் தொடங்கிவைத்துள்ளாா். பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்துத் துறை லாப நோக்கமற்ற சேவை துறை. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச் சேவையின் மூலம் பணிக்கு செல்லும் மகளிா், சிறு வியாபாரம் செய்பவா்கள் பயன் பெற்று வருகின்றனா் என்றாா்.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய பேருந்துகள்:

நாமக்கல்- சென்னை இடையே 2 பேருந்துகள், நாமக்கல்- சேலம்- மதுரை வழியாக 1 பேருந்து, நாமக்கல்- கோயமுத்தூா் வழியாக 1 பேருந்து, ராசிபுரம்- சேலம் - பெங்களூரு வழியாக 2 பேருந்துகள், திருச்செங்கோடு- சேலம் - சென்னை வழியாக 1 பேருந்து என 7 புதிய புகா்ப் பேருந்துகளும், நாமக்கல்- காரவள்ளி வழியாக ஒரு பேருந்து, நாமக்கல்- மோகனூா் வழியாக ஒரு பேருந்து, திருச்செங்கோடு- குமாரபாளையம் வழியாக ஒரு பேருந்து என 3 புதிய நகா்ப்புற பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். தமிழக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

X
Dinamani
www.dinamani.com