பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதைப் பாா்வையிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதைப் பாா்வையிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பள்ளிபாளையத்தில் கரையோர மக்கள் வெளியேற்றம்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளிபாளையத்தில் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
Published on

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பள்ளிபாளையத்தில் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை புதன்கிழமை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தேவையான உதவிகள் செய்து தரப்படும் என ஆறுதல் கூறினாா்.

மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனையொட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை சந்தித்துத் தேவையான வசதிகள், உதவிகள் செய்து கொடுக்கப்படும் என ஆட்சியா் ஆறுதல் கூறினாா்.

நீா்வரத்து அதிரித்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீா் தடையின்றி வழங்கவும், மருத்துவக் குழுவினா் மருத்துவ பரிசோதனைகளை செய்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு போதிய மருந்துகள் இருப்பு உள்ளது குறித்தும், மருத்துவ வசதிகள், மருத்துவா்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் அங்குள்ள மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி,

துணை காவல் கண்காணிப்பாளா் இமயவரம்பன், நகராட்சி, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com