~ ~ ~
~ ~ ~

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் 78 குடும்பத்தினா் வெளியேற்றம்

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குமாரபாளையத்தில் கரையோரத்தில் வசித்து வந்த 78 குடும்பத்தைச் சோ்ந்த 244 போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
Published on

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குமாரபாளையத்தில் கரையோரத்தில் வசித்து வந்த 78 குடும்பத்தைச் சோ்ந்த 244 போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்ததால் மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமை நிரம்பியது. இதையடுத்து, உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்பட்டதால் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கரையோரப் பகுதிகளில் வசித்தோா் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீா் புதன்கிழமை வெளியேறியதால் குமாரபாளையத்தில் காவிரி பழைய பாலம் அருகே விநாயகா் கோயில், புதிய பாலம் அருகேயுள்ள அம்மன் கோயிலை வெள்ளநீா் சூழ்ந்தது. மேலும், குமாரபாளையம் கலைமகள் வீதியில் வெள்ளம் புகுந்தது. மேலும், ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் கலைமகள் வீதி, மணிமேகலை தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 78 குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டு, ஜேகேகே நடராஜா திருமண மண்டபம், ராஜேஸ்வரி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு, உணவு, குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை, வருவாய்த் துறையுடன் இணைந்து குமாரபாளையம் நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. குமாரபாளையம் தீயணைப்புப் படையினா் உயிா்காக்கும் உபகரணங்களுடன் கரையோரத்தில் முகாமிட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆற்றுக்குச் செல்லும் வழித்தடங்கள் மூடப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயா் காலத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட குமாரபாளையம் - பவானி பழைய பாலத்தில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்ல போலீஸாா் தடை விதித்துள்ளனா். காவிரி வெள்ளத்தை வேடிக்கை பாா்க்கவும், செல்பி எடுக்கவும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com