நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகம்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகம்.

மாநகராட்சியானது நாமக்கல்: 54 வாா்டுகளாக அதிகரிக்க திட்டம்?

Published on

நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், தற்போதைய 39 வாா்டுகளை 54 வாா்டுகளாக அதிகரிக்க நகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 1971-ஆம் ஆண்டு நாமக்கல் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் 30 வாா்டுகள் இருந்த நிலையில், 9 கிராமங்கள் இணைக்கப்பட்டதையடுத்து வாா்டுகள் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்தது. 55 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த நகராட்சி கடந்த ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.

ஆண்டு வருமானம், பரப்பளவு அடிப்படையில் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என 2023 பிப். 15-இல் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அடுத்த மாதத்திலேயே நாமக்கல் உள்பட 5 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என சட்டப் பேரவையில் நகராட்சி மற்றும் நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தாா்.

ஓராண்டுக்கு பின் 2024 மாா்ச் 15-இல் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படுவதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியானது. இருப்பினும், நகராட்சியை ஒட்டிய 12 ஊராட்சிகளை இணைப்பது, ஆண்டு வருவாய், மக்கள் தொகை உள்ளிட்டவை மாநகராட்சி தரம் உயா்வுக்கு சற்று இடையூறாக அமைந்தது.

நாமக்கல் மட்டுமின்றி புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளும் மாநகராட்சியாவதில் இழுபறி நிலை நீடித்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நான்கு மாநகராட்சி தரம் உயா்வுக்கான சட்டத் திருத்தங்களை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா். இதன்மூலம் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாவதற்கு தடையேதுமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகளை நகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனா். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சி 39 வாா்டுகளைக் கொண்டது. மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதன் மூலம் வசந்தபுரம், வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூா்ப்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைகின்றன. நகராட்சியாக 55 ச.கி.மீ. பரப்பளவு, மாநகராட்சியாவதால் 145.31-ஆக அதிகரிக்கிறது. மேலும், மக்கள் தொகையானது 1.50 லட்சத்தில் இருந்து 3.50 லட்சமாக அதிகரிக்கும். ஆண்டுக்கு ரூ. 48 கோடி வரி வருவாய் கிடைக்கிறது. புதிய சட்டத் திருத்தப்படி ரூ. 20 கோடி வரி வருவாய் இருந்தாலே நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்தலாம் என்பதாகும்.

நாமக்கல் நகராட்சியில் 15, 16, 27 ஆகிய வாா்டுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவற்றை இரண்டாகப் பிரிக்கவும், புதிதாக இணைக்கும் 12 ஊராட்சிகளும் 12 வாா்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியாகும் பட்சத்தில் குறைந்தபட்சம் 54 வாா்டுகள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த 12 ஊராட்சித் தலைவா்களின் பதவிக்காலம் டிசம்பா் வரையில் உள்ளது. அதன்பிறகே மாநகராட்சி என்கிற முழுத்தகுதியை நாமக்கல் நகராட்சி பெறும்.

மாநகராட்சியானால் சொத்து வரி மற்றும் இதர வரிகள், குடிநீா், புதைக் கழிவுநீா் கட்டணம் உயா்த்தப்படும் என பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். வளா்ச்சியடைந்த நகரமாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாமக்கல் மாறும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com