புதிய பேருந்து நிலைய கடைகள் மூலம் ரூ. 6.51 கோடி வருவாய் ஈட்டப்படும்: மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகள், உணவகங்கள் ஏலம் மூலம் ரூ. 6.51 கோடி வருவாய் ஈட்டப்படும் என மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண்-2 முதலைப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் 57 கடைகள், 2 உணவகங்கள், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் பாதுகாப்பு அறை-1, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பேருந்துகளுக்கான சுங்கம் வசூல் உள்ளிட்ட 5 ஆண்டு உரிம இனங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உரிம இனங்களுக்கு கடந்த அக். 4-இல் முதன்முறையாக பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இதில் 33 கடைகள், 2 உணவகங்கள், 4 ஆண்டு உரிம இனங்களுக்கு கோரப்பட்ட உயா்ந்த ஏல கேள்விகள் ஏற்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட பொது ஏலம் முடிவுற்ற 33 கடைகளுக்கு மாத வாடகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 90.83 லட்சம், 12 மாத வாடகை முன்வைப்பு தொகையாக ரூ. 90.83 லட்சம், இரண்டு உணவகங்கள், நான்கு ஆண்டு உரிம இனங்கள் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 61.22 லட்சம் மற்றும் உரிமம் இனங்களுக்கு வைப்புத் தொகையாக ரூ. 1.68 கோடி என மொத்தம் ரூ. 4 கோடியே 10 லட்சத்து 88 ஆயிரம் பெறப்பட்டுள்ளது.
இக் கடைகளை ஏலம் எடுத்தோருக்கு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்வு மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக, அரசு பயன்பாட்டுக்கு 2 கடைகள் போக மீதமுள்ள 22 கடைகள், ஓராண்டு உரிம இனம் ஆகியவற்றுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஏலத்தில் பலா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். மொத்தம் 22 கடைகளுக்கு 107 போ் ஏலம் கேட்டனா்.
இந்த ஏலத்தில் 22 கடைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 16,000- முதல் ரூ. 41.500- வரை ஏலம்
கோரப்பட்டது. இதன்மூலம் மாத வாடகையாக ஆண்டுக்கு ரூ. 67.24 லட்சம் மற்றும் 12 மாத வாடகை ரூ. 67.24 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 48 ஆயிரம் வருமானம் ஈட்டப்படும். மேலும், ஆண்டு உரிம இனமான பேருந்து நிலையத்தில் வந்து செல்லும் பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.
12.40 லட்சம் கோரப்பட்டது. கடைகள், உரிம இனங்களுக்கு வைப்புத் தொகையாக ரூ. 93 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. இதனைச் சோ்த்து தற்போது நடைபெற்ற பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக மொத்தம் ரூ.2 கோடியே 39 லட்சத்து 88 ஆயிரம் ஈட்டப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், ஆண்டு உரிம இனங்களுக்கான பொது ஏலத்தின் மூலமாக நாமக்கல் மாநகராட்சிக்கு மொத்தம் ரூ. 6 கோடியே 50 லட்சத்து 76 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் ஏலத்தில் விடப்பட்டு, அவற்றை ஆா்வமுடன் மக்கள் எடுத்த வகையில் நாமக்கல் மாநகராட்சி சாதனை புரிந்துள்ளது என்றாா்.

