என்கே-29-மீட்டிங்
என்கே-29-மீட்டிங்

ராசிபுரத்தில் மினி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா (டைடல் பாா்க்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
Published on

நாமக்கல்: ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா (டைடல் பாா்க்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வசதியாக்கல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று 34 பயனாளிகளுக்கு ரூ. 22.45 கோடி மதிப்பில் தொழிற் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல், உள்கட்டமைப்பு, திறமைவாய்ந்த பணியாளா்கள், வணிக ரீதியான வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோருக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.

நாமக்கல் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் கடனுதவி திட்டங்கள் மூலமாகவும் புதிய தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு விதமான மானிய உதவிகள் மூலமாகவும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட தொழில் மையம் சாா்பில், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடித் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டங்களில் 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ. 2.27 கோடி அரசு மானியத்துடன் ரூ. 21.39 கோடி தொழிற் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ. 2 கோடி அரசு மானியத்துடன் ரூ. 6.50 கோடி தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொழில் மட்டுமின்றி சேவைச் சாா்ந்த தொழில்கள் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞா்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட 850 ஹெக்டா் பரப்பளவில் சிப்காட் தொழிற் பூங்கா உருவாக்கிட இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படுவதால் நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும்.

ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க் அமைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க் அமைக்கப்படும். ரூ. 90 கோடி மதிப்பில் டென்மாா்க் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பால் பதப்படுத்தும் ஆலை, ரூ.196 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இளைஞா்கள் தொழில் முனைவோா்களாக உருவாகி தங்கள் தொழிலை சிறப்பாக மேம்படுத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் செ.பூபதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வீ.சகுந்தலா, மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைவா் ந.இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலாளா் பா.ராமசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கா.முருகன், மண்டல மேலாளா் க.ஸ்ரீநிவாஸ், மாவட்ட தொழில் மைய புள்ளி விவர ஆய்வாளா் கோ.ம.மகேஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

என்கே-29-மீட்டிங்

குறு, சிறு தொழில்களுக்கான கடன் வசதியாக்கள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். உடன், மக்களவை உறுப்பினா் வி. எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் வீ. சகுந்தலா உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com