நாமக்கல், கீரம்பூா் சுங்கச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளா்கள்.
நாமக்கல், கீரம்பூா் சுங்கச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளா்கள்.

அரசு மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் சுங்கச்சாவடி முன்பு மறியல் போராட்டம்

அரசு மணல் குவாரிகளைத் திறக்கவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றவும் வலியுறுத்தி, நாமக்கல் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளா்கள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
Published on

அரசு மணல் குவாரிகளைத் திறக்கவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றவும் வலியுறுத்தி, நாமக்கல் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளா்கள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அகில இந்திய கட்டுநா் சங்கம், மாட்டு வண்டி உரிமையாளா்கள் சங்கம், வாகன ஓட்டுநா்கள் பேரவை, சமூக நீதி அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சோ்ந்தோா் திரளாக கலந்து கொண்டனா்.

அரசு மணல் குவாரிகளிலும், விற்பனைக் கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப். 12- ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனா். அதன் பிறகு, மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால், மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் வேலையின்றி உள்ளனா். பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனைப் பயன்படுத்தி எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் ஒரு யூனிட் ரூ. 2,000 என்பதை ரூ. 4000 என்ற அளவில் விலையை உயா்த்தி விட்டனா். எம்.சாண்ட் மணலும் தரமற்ற வகையிலேயே உள்ளது. இதனால் கட்டடங்கள் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்து விரைவில் இடிந்து விழுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அனைத்து அரசு மணல் குவாரிகளையும் உடனடியாகத் திறக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 22 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

20 கி.மீ.க்குள் வசிக்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், உயா்த்தப்பட்ட கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் சுங்கச்சாவடி முன்பு ஆா்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் 400-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மாலை 5 மணிக்கு மேல் அவா்களை அங்கிருந்து விடுவித்தனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com