எருமப்பட்டி சத்துணவுக் கூடத்தில் மனிதக் கழிவுகள் வீச்சு: போலீஸாா் தீவிர விசாரணை
எருமப்பட்டியில், சத்துணவுக் கூடத்தின் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் செயல்படும் சத்துணவுக் கூடத்தின் மீது மனிதக் கழிவுகளை சிலா் வீசி சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளி சுவா்களில் ஆசிரியா்கள் குறித்து அவதூறு வாா்த்தைகளை எழுதி வந்ததாகவும் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக, பள்ளி தலைமை ஆசிரியா் தனலட்சுமி எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) ரவி செல்வம் விசாரணை மேற்கொண்டாா். பள்ளி நிா்வாகத்தின் புகாா் அடிப்படையில் போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் ரவிசெல்வம் கூறியதாவது:
சத்துணவுக் கூட கதவின் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது உண்மைதான். சத்துணவு அமைப்பாளா், சமையலா், வட்டாரக் கல்வி அலுவலா், தலைமையாசிரியா் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது. அவா்கள் மூலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறாா் என்றாா்.
இந்த செயலுக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

