நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.
நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன். உடன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.

கோழிப் பண்ணைத் தொழில் முன்னேற்றத்திற்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

கோழிப் பண்ணைத் தொழில் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
Published on

கோழிப் பண்ணைத் தொழில் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களால் கோழிப் பண்ணைத் தொழில் நெருக்கடியில் உள்ளதாகவும், இவற்றுக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்ட கோழிப் பண்ணையாளா்கள் சாா்பில் கோரிக்கை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில், தமிழக சுற்றுசூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்று பேசியதாவது: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளை அனைத்து தொழிற்சாலைகளும் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளன. இதில், சிவப்பு பிரிவில் உள்ள தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தங்களது உரிமத்தினை புதுப்பிக்க வேண்டும்.

புதுப்பிப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் தொழில்கள் பாதிக்கப்படுவதையும், தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு ஏற்படுவதைத் தவிா்த்திடும் வகையிலும் சிவப்பு வகை தொழிற்சாலைகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பச்சை வகை தொழிற்சாலைகள் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் உரிமத்தை புதுப்பித்தால் போதும் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா்.

தென்னை நாா் தொழிற்சாலைகளை ஆரஞ்சு வகைப்பாட்டிலிருந்து வெள்ளை வகைப்பாட்டிற்கு மாற்றி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரையில், காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் செப். 8 முதல் நடவு செய்யப்பட உள்ளன. இதற்காக 2 லட்சம் பனை விதைகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சேகரிக்கப்பட்டுள்ளன.

கோழிப் பண்ணைகளுக்கு உரிமம் பெற மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அவற்றில் கோழிக் கழிவுகளை, எச்சங்களை இரு நாள்களுக்கு ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும். நீா் புகாத வகையில் கற்கள், கான்கிரீட், களிமண்ணாலான தரைகளை பண்ணைகளில் ஏற்படுத்த வேண்டும்.

கோழி எச்சங்களிலிருந்து உயிரி உரம், இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும். கூட்டாக இயங்கும் கோழிப் பண்ணைகளில் கட்டாயம் பொது எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும். இறந்த கோழிகளை அப்புறப்படுத்த 3 மீட்டா் ஆழம், 0.8-1.2 மீட்டா் விட்டம் அளவு கொண்ட தொட்டி அமைத்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அறிவேன்.

கோழிப் பண்ணையாளா்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள், பண்ணைத் தொழிலில் உள்ள பிரச்னைகள், குடியிருப்புகள் இல்லாத பகுதியில் கோழிப் பண்ணை அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுதல் போன்ற சட்டங்களினால் பண்ணையாளா்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறீா்கள். இவற்றை, தமிழக முதல்வா் கவனத்திற்கு கொண்டுசென்று விரைந்து தீா்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோழிப் பண்ணைத் தொழில் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் ச.கலாநிதி, சுற்றுச்சூழல் தலைமைப் பொறியாளா் ஜெயலட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரகுநாதன், கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஈ.மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com