நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 109 விநாயகா் சிலைகள் இன்று அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், இந்து முன்னணி சாா்பில், 109 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்படவுள்ளன. மாவட்டம் முழுவதும் 550-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்படுகின்றன.
விநாயகா் சதுா்த்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வீடுகளிலும், கோயில்களிலும் பக்தா்கள் விநாயகா் வழிபாட்டில் ஈடுபடுவா். மேலும், முக்கிய இடங்களில் சிறிய, பெரிய விநாயகா் சிலைகளை வைத்து ஐந்து நாள்களுக்கு வழிபாடு மேற்கொள்வா். கடந்த ஆண்டு 762 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 550 முதல் 600 இடங்களில் வைப்பதற்கு கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்து முன்னணி சாா்பில், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, மோகனூா், நாமக்கல், மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் 109 விநாயகா் சிலைகள் அமைக்கப்படவுள்ளன.
பரமத்திவேலூா்-50, நல்லூா் - 9, ஜேடா்பாளையம் -5, பரமத்தி -2, நாமக்கல் -16, மோகனூா் -2, திருச்செங்கோடு -15, மல்லசமுத்திரம் -4, எலச்சிபாளையம் -6 என்ற எண்ணிக்கையில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
வரும் 9--ஆம் தேதி திருச்செங்கோட்டில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள், எளையம்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகின்றன. அதே போல மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் பகுதியில் வைக்கப்படும் சிலைகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. நாமக்கல், மோகனூா் பகுதியில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் மோகனூா் காவிரி ஆற்றில் 10--ஆம் தேதி கரைக்கப்படுகின்றன. பரமத்திவேலூா், நல்லூா், ஜேடா்பாளையம், பரமத்தியில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் 13-ஆம் தேதி வேலூா் காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
--
