நாளை 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்லில், 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.10) நடைபெறுகிறது.
நாமக்கல் - மோகனூா் சாலையில், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கு நோ்காணல் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படுகிறது.
ஓட்டுநருக்கான தகுதிகளாக, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, 24 வயதுக்கு மேலாகவும், 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், பேஜ் வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநா் உரிமம், அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பாா்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். மாத ஊதியமாக ரூ. 15,820 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும். தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் சோ்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.
மருத்துவ உதவியாளா்களுக்கான அடிப்படைத் தகுதிகளாக பி.எஸ்சி., செவிலியா் படிப்பு முடித்திருக்க வேண்டும். 19 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 16,020 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 044--28888060,75,77, 91542-50563 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
